மீனையும், மல்லிப்பூவையும் ஒரே கூடையில் அள்ளிப் போட்டால் என்னாகும்? அதுதான் 2010 ன் அலங்கோலம். அல்லது அலங்காரம்! சுமார் இரண்டு டஜன் நடிகைகள் அறிமுகம் ஆனார்கள். அதில் நாலு பேராவது தேறினார்களா என்றால் “போங்கய்யா நீங்களும் உங்க ஸ்டாஸ்ட்டிக்கும்” என்று நமக்கு நாமே அலுத்துக் கொள்ளலாம். அப்படி ஒரு வறட்சி கடந்த வருடத்தில். 
த்ரிஷா தெலுங்குக்கு போனார். அசின் அதற்கு முன்பே அங்கே போய் டேரா போட்டார். நயன்தாராவுக்கு காதல் முற்றிப் போனதால் உடம்பும் வற்றிப்போனது. விளைவு? ஒரு மாமாங்கத்திற்கு அவரை நெருங்கவே விடவில்லை ரசிகன். (அப்புறம் திரும்பி வந்து பாஸ் (எ பா) பண்ணினார் என்று வைத்துக் கொள்ளுங்களேன். இவர்கள் விட்டு வைத்த கேப்பில் உள்ளே நுழைந்தவர்தான் தமன்னா. குருட்டு அதிர்ஷ்டம் சூர்யாவுடன் ஜோடி சேர வைத்தது. அயன் ஹிட் என்றதும், பெட்டிக்கடையாக இருந்த தமன்னாவின் மார்க்கெட் சூப்பர் மார்க்கெட் ஆனது. அப்புறம் இவர் ஜோடி சேராத முன்னணி ஹீரோக்களே இல்லை என்கிற அளவுக்கு அதிர்ஷ்ட மழை ஆளையே குளிர வைத்தது. இவர் நடித்த பையா என்ற படம்தான் கடந்த வருடத்தின் சூப்பர் ஹிட்களில் ரொம்ப முக்கியமானது. அப்புறம் மைனா. (கடைசியாக வரலாம் அமலா மேட்டருக்கு)
விண்ணை தாண்டி வருவாயா படத்தில் த்ரிஷாவை பார்த்து பைத்தியம் பிடித்து அலையாத குறைதான் ஒவ்வொரு ரசிகனுக்கும். திடீர் பேரழகியாக வலம் வந்த இவரை, நாலு மாதம் கழித்து வந்த மன்மதன் அம்பு குத்தி கிழித்தது. “மேக்கப் சரியில்லைங்க. கேமிரா சரியில்லைங்க” என்று த்ரிஷாவின் ரசிகர்கள் தங்களை தாங்களே சமாதானப்படுத்திக் கொண்டாலும், உள்ளுக்குள்ளே சக்கரவர்த்தி. உண்மையிலே மெழுகுவர்த்தி ஆனார்கள் அவர்கள்.
ஆயிரத்தில் ஒருவன் என்ற படத்தில் ரீமாசென்-கார்த்தி உரசல்களில் தீப்பற்றி எரிய ஆரம்பித்தான் அதே ரசிகன். உம் மேல ஆசைதான் என்று அவரை தேயாய் தேய்த்தார்கள் ரீமாவும் ஆன்ட்ரியாவும். இந்த படத்திற்கு பிறகு ரீமாசென்னுக்கு வந்த ஆஃபர்களை பயன்படுத்தி நாலைந்து தமிழ் படங்களில் நடித்திருக்கலாம். சம்பள பிசாசு இவரை பேயாட்டம் போட வைத்ததால் வேப்பிலை அடிக்கக் கூட கிட்ட நெருங்கவில்லை யாரும். 
மாசிலாமணி என்ற போன போன வருடத்து ஹிட்டை வைத்து 2010 ஐ நிரப்பிவிடலாம் என்று கணக்கு போட்ட சுனைனாவுக்கு விதி கொடுத்த பரிசு விரக்தி மட்டுமே! ஆளையே காணோம் இப்போ.
இனிப்பு உப்பு என்று இரண்டுமாக கலந்து எந்த ருசியிலும் அடங்காமல் நின்றவர் நம்ம அஞ்சலி. அங்காடித் தெரு, ரெட்டச்சுழி, மகிழ்ச்சி என்று கணிசமாக நடித்திருந்தாலும் அங்காடி தெருவின் மூலம் பத்திரிகைகளும் அஞ்சலிக்கு அன்பு செலுத்தியதை குறிப்பிட்டாக வேண்டும்.
உலக அழகிக்கு ஒரு குழவி (குழந்தை) பிறக்கிற வரைக்கும் விடாது போலிருக்கிறது சினிமா. கடந்த வருடத்தில் இரண்டு தமிழ் படங்களை கொடுத்தார் ஐஸ். ராவணன் திராபை என்று விமர்சித்து தமிழ், தெலுங்கு, இந்தி பேசும் மும்மொழி நல்லுலகமும் முகத்தை து£க்கி வைத்துக் கொண்டாலும், தண்ணீரில் நனைந்த ஐஸ்வர்யா பச்சனை நினைத்து நினைத்து தும்மிக் கொண்டிருந்தான் திருவாளர் ரசிகன்! எந்திரனில் வந்த ஐஸ் இன்னொரு பரிமாணம். (தலைவரு எங்க தலைவிக்கு இடம் விட்டாரு?)
கோடம்பாக்கத்தின் அடுத்த டாய்ஸ் அனுஷ்காதான். என்ன ஒரு சங்கடம் என்றால், பொம்மை கொஞ்சம் உசரம்! சூர்யா, விக்ரம் என்று தமிழ் பட நாயகர்களை தேர்வு செய்வதிலும், பொண்ணுக்கு புத்தி ரொம்ப கூர்மை.
ஆந்திராவில் மஹதீரா என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த சூட்டோடு சென்னைக்கு வந்திறங்கிய காஜல் அகர்வாலுக்கு தமிழகம் தந்தது ஆறிய அப்பளம் கூட இல்லை. ‘நான் மகான் அல்ல’ படத்தின் ரிசல்ட் ஆவரேஜ் என்கிறது விநியோகஸ்தர் வட்டாரம்.
யாரு பெத்த புள்ளையோ, இப்படி சீரழிஞ்சு போச்சே என்று மூக்கை சிந்த வைத்த சிந்து சமவெளி அமலாதான் இந்த வருடத்தின் சிறந்த சாகசக்காரர். சிந்து சமவெளிக்கு முன் கமிட் ஆன லோ-பட்ஜெட் படமான மைனா மூலம், வெளிச்சம் பரவியது அவர் வாழ்வில். அதை முறையாக தக்க வைத்துக் கொண்டது அவரது சாமர்த்தியம்.
அடுத்தடுத்த படங்களில் முன்னணி நடிகரோடு டூயட் பாட தயாராகிவிட்டார். முதல் படத்தில் வாங்கிய சம்பளத்தை ஒப்பிட்டால், அமலாவின் இப்போதைய சம்பளம் பத்து இருபது மடங்கு அதிகம் என்கிறார்கள்.
இப்ப சொல்லுங்க. போன வருஷத்துல பொங்கல் வச்சு, இந்த வருஷமும் கடா வெட்றது யாருங்க?







