தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம் துவங்கி நாற்பது ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்தியாவில் இயக்குனர்களுக்காக துவங்கப்பட்ட முதல் சங்கம்
என்ற பெருமை எங்களுக்குதான் என்றார் சங்கத்தின் தலைவர் பாரதிராஜா.
பெருமையோடு பெருமையாக இந்த நாற்பதாண்டு கால வளர்ச்சியை விழாவாக கொண்டாட முடிவெடுத்திருக்கிறது சங்கம். எதிர்வரும் அக்டோபர் 23 ந் தேதி நேரு உள் விளையாட்டரங்கில் இந்த விழாவை நடத்தப் போகிறார்களாம். அன்றைய தினம் காலையில் இருந்தே பயனுள்ள பல நிகழ்ச்சிகளை நடத்த தீர்மானித்திருக்கிறது சங்கம். இந்தியா முழுவதுமிருந்தும் வரப்போகும் முக்கிய இயக்குனர்கள் தலைமையில் கருத்தரங்கம், அன்று மாலை பழைய தலைமுறை, புதிய தலைமுறை இயக்குனர்களுக்கான பட்டி மன்றம் என்று களைகட்ட போகிறது நிகழ்ச்சி. சீஃப் கெஸ்ட் யார் என்று பாரதிராஜாவிடம் கேள்வி எழுப்பிய போது அண்டை மாநிலத்திலிருந்து வந்தால்தான் கெஸ்ட். இங்கேயே இருப்பவர்களில் முக்கியமானவர்களை அழைப்பதால் அவர்களை கெஸ்ட் என்று சொல்ல மாட்டேன் என்றார்.
கலைத்துறையில் திமுக அதிமுக ஆகிய இரு கட்சிகளை சேர்ந்தவர்களும் இருப்பதால் இருவருக்கும் அழைப்பு விடுக்கப்படுமா? முதல்வர் வருவாரா போன்ற பல்வேறு கேள்விகளுக்கு பதில் சொல்ல மறுத்த பாரதிராஜா ஒன்றை மட்டும் உறுதியாக சொன்னார். யாரை எங்க கொண்டு போய் உட்கார வைக்கணும் என்பது எங்களுக்கு நல்லா தெரியும்…
அவர் சொன்ன இன்னொரு பதில், இது எங்க சங்கத்தை சேர்ந்த விழா. இதில ஏதாவது அரசியல் தொடர்பாக கேள்வி கேட்டு பதிலை வாங்க பார்க்காதீங்க.
அப்படியும் பறந்து வந்தது இன்னொரு கேள்வி. சீமான் கைது விஷயத்தில் இயக்குனர்கள் சங்கம் அமைதியா இருக்கே?
அவர் சங்கம் தொடர்பாக ஏதாவது பேசி, அல்லது இயக்குனர்களுக்காக ஏதாவது நடவடிக்கையில் ஈடுபட்டு சிறை சென்றிருந்தால் பேசுவோம். இப்போது நடந்திருப்பது இயக்குனர்கள் சங்கத்திற்கு சம்பந்தமில்லாத விஷயம்… -இது இயக்குனர்கள் சங்க செயலாளர் ஆர்.கே.செல்மணியின் திட்டவட்டமான பதில்.



Posted in 






