கமல்ஹாசனுடன் முதன்முதலாக திரிஷா ஜோடியாக நடிக்கும் படம், `மன்மதன் அம்பு’. இந்த படத்தை உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கிறார். கே.எஸ்.ரவிகுமார் டைரக்டு செய்கிறார். படப்பிடிப்பு இத்தாலி, பிரான்சு, ஸ்பெயின் ஆகிய நாடுகளில்,
50 நாட்களுக்கும் மேல் நடந்தது. படப்பிடிப்பை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய திரிஷா, `தினத்தந்தி’ நிருபருக்கு பேட்டி அளித்தார்.
நிருபர் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு திரிஷா அளித்த பதில்களும் வருமாறு:-
முதல் அனுபவம் கேள்வி:-
`மன்மதன் அம்பு’ படத்தில் கமல்ஹாசனுடன் முதன்முதலாக ஜோடி சேர்ந்து நடித்த அனுபவம் எப்படி இருந்தது?
பதில்:- கமல் சார் ஒரு பல்கலைக்கழகம் மாதிரி. அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன். இதற்கு முன்பு நான் பல படங்களுக்காக வெளிநாடுகளுக்கு போய் வந்து இருக்கிறேன். `மன்மதன் அம்பு’ படப்பிடிப்புக்காக போய் வந்தது, ஒரு இனிய அனுபவம்.
கேள்வி:- கப்பலில் திடீரென்று காணாமல் போய்விட்டீர்களாமே?
பதில்:- அது ஒரு விவகாரமான சம்பவம் அல்ல. யதேச்சையாக நடந்தது. கப்பலில் கூட்டம் அதிகமாக இருந்ததால், பரபரப்பு ஆகிவிட்டது.
கேள்வி:-உங்களின் முதல் இந்தி படம் `கட்டாமிட்டா’ எப்படி போகிறது?
பதில்:- சென்னை உள்பட எல்லா நகரங்களிலும் மிகப்பெரிய வசூல் சாதனையுடன் ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த படத்தில் நான், நகராட்சி கமிஷனராக வித்தியாசமான வேடத்தில் நடித்து இருந்தேன். அதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கிறது.
கேள்வி:- `விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தில் சிலம்பரசனுடன் முத்தக்காட்சியில் நடித்தீர்கள். அதேபோல் இன்னொரு படத்திலும் முத்த காட்சி வைத்தால் நடிப்பீர்களா?
பதில்:- `விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தில் அந்த காட்சி மிக இயல்பாக அமைந்திருந்தது. அது, உதட்டுடன் உதடு ஒட்டுகிற காட்சிதான். அதை கவுதம் மேனன் மிக நாகரீகமாக படமாக்கி இருந்தார். தொடர்ந்து அப்படி நடிக்க மாட்டேன்.
அசின் பிரச்சினை கேள்வி:- அசின் ஒரு இந்தி படப்பிடிப்புக்காக இலங்கை சென்று வந்தது, பிரச்சினை ஆகியிருக்கிறது. நீங்களும் இந்தி படத்தில் நடிக்கிறீர்கள். இலங்கையில் படப்பிடிப்பு வைத்தால் கலந்துகொள்வீர்களா?
பதில்:- நான், தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த பெண். இங்கே உள்ள நடிகர் சங்கம் இலங்கைக்கு போகக்கூடாது என்றால், அது இந்தி படமாக இருந்தாலும் சரி, வேறு எந்த மொழி படமாக இருந்தாலும் சரி, போக மாட்டேன். அந்த மாதிரி ஒரு சூழ்நிலை எனக்கு இதுவரை வரவில்லை. வரும்போது பார்க்கலாம்.
கேள்வி:- கடந்த 7 வருடங்களாக வெற்றிகரமான கதாநாயகியாக இருந்து வருகிறீர்கள். திருமணம் பற்றி யோசிக்கவே இல்லையா? எப்போது திருமணம் செய்துகொள்வதாக உத்தேசம்? அது, காதல் திருமணமாக இருக்குமா?
பதில்:- நிஜமாகவே திருமணத்தை பற்றி நான் யோசித்து பார்ப்பதே இல்லை. நடக்கும்போது நடக்கட்டும். இப்போதைக்கு அந்த எண்ணம் எனக்குள் இல்லை. ஒரு விஷயத்தில் உறுதியாக இருக்கிறேன். நான் திருமணம் செய்துகொண்டால், அது காதல் திருமணமாகத்தான் இருக்கும். தெரியாதவரை, திருமணம் செய்துகொள்ள மாட்டேன். பார்த்து, பேசி, பழகி, எனக்கு பிடித்தால்தான் திருமணம்.” இவ்வாறு திரிஷா கூறினார்.









