மே 18ம் திகதி உலக மக்களை அண்மித்துக்கொண்டிருக்கின்றது. இத்தினம் உலகத் தமிழ் மக்களை ஏங்க வைக்கின்றது. ஆனால் இலங்கையில் ஆட்சியில் உள்ள மகிந்தவின் அரசாங்கம் இந்த நாளை கொண்டாடுவதற்காய் கொடிகளைப் பறக்கவிட்டு ஆவலுடன் காத்திருக்கின்றது.
முடிவுக்கு வந்த போரின் காரணமாக சமாதானத்தை அடைந்து விட்டதாக இலங்கை அரசாங்கமும் அதன் ஜனாதிபதி மகிந்தவும் கொக்கரித்தாலும் தமிழ் மக்களோ தங்களை ஏங்க வைத்த அந்த கொடிய நாளை எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் எதிர்கொள்ள தயாராக உள்ளார்கள்.
எவ்வாறு அந்த நாளை நாம் கழிக்கப் போகின்றோம் என்ற ஏக்கம் அவர்களிடத்தில் குடிகொள்ளத் தொடங்கி மாதங்கள் சில ஆகின்றன. “விதையாகிப் போனவர்க்காய் விளக்கேற்ற வாரீர்” என்ற அழைப்பு கனடாவில் ஒலிக்கத் தொடங்கியுள்ளது.
16ம் திகதி ஞாயிற்றுக் கிழமையன்று கனடிய தமிழ்க் கலைஞர்கள் ஒன்றிணைந்து நடத்தும் மேற்படி நிகழ்வு உலகத் தமிழ் மக்களின் உள்ளங்களைத் திறந்து காட்டும் ஒரு கருவியாக கணிக்கப்படவுள்ளது.
மே 18ம் திகதி கனடாவில் “போர்க்குற்ற நாள்” பிரகடனம் செய்யப்படவுள்ளது. கனடிய தமிழர் சமூகமும் கனடிய மாணவர் சமூகமும் இணைந்து நடத்தும் போர்க்குணமுள்ள நிகழ்வு மேடையேறக் காத்திருக்கின்றது.
இவ்வாறு உலகெங்கும் உள்ள தமிழ் மக்களும் அவர்களுக்காய் தங்கள் அனுதாபத்தை வழங்கும் ஏனைய மக்களும் கடந்த வருட மே மாத கொடூரங்களை மீட்டு வந்து அவற்றைப் பற்றிய ஒரு கவனத்தை நம் மக்கள் மத்தியில் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
ஆனால் இலங்கை அரசாங்கமும் உலக நாடுகள் பலவற்றில் தூதரகங்களில் பணியாற்றும் இலங்கை அதிகாரிகளும் மே 18ம் திகதி என்பது இலங்கை அரசாங்கத்திற்கு ஒரு சாதனைக்குரிய நாளாகவே விடியப் போகின்றது என்ற அரசு சார்பான பிரச்சாரத்தை மேகொண்டு வருகின்றார்கள்.
சிங்கள மக்கள் மட்டுமல்ல, தமிழ் மக்களும் இலங்கைப் பிரஜைகளே. எனவே அவர்களும் சிங்கள மக்களுடன் சேர்ந்து யுத்த வெற்றியை கொண்டாட வேண்டும் என்று நிர்ப்பந்திக்கும் சம்பவங்கள் அந்த சிறிய தீவில் மேடையேறத் தொடங்கியுள்ளன.
கடந்த வருடம் இதே நாள் வரையிலும் கொல்லப்பட்ட போராளிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரின் முகங்கள் சிதைந்து போயிருந்தாலும் அவர்கள் பற்றிய எண்ணங்கள் நம்மிடத்தில் தொடர்ச்சியாக பசுமரத்தாணியாக தெளிவாகத் தெரிகின்றன.
தமிழர்களாகிய நாங்கள் இந்த தினத்தை கொண்டாட முடியாது. தவிக்கின்றோம். அதேபோல இலங்கை அரசாங்கமும் கொண்டாடி மகிழ்ந்து நிற்க முடியாது. எத்தையோ சோதனைகளைத் தாங்கி தாங்கள் வெற்றியை அடைந்தாலும் அவற்றுக்குப் பின்னால் பல தோல்விகளும் உள்ளன என்பதே நிதர்சனமாகும்.
ஆயிரக்கணக்கான சிங்களச் சிப்பாய்கள் அங்கங்களை இழந்தவர்களாக தவிக்கின்றார்கள். அவர்களில் சிலர் தங்கள் உயிர்களை மாய்த்துக் கொள்வதற்காக தற்கொலை முயற்சிகளில் இறங்கியுள்ளார்கள். எத்தனையோ சிங்களத் தாய்மார்கள் தங்கள் இனிய புதல்வர்களின் முகங்களைக் காண முடியாது தவிக்கின்றனர். இவையெல்லாம் தெற்கிலிருந்து வெளியாகும் செய்திகளே.
அவுஸ்திரேலியாவிலிருந்து வெளியாகும் ஆங்கிலப் பத்திரிகையில் பிரசுரமான கட்டுரையொன்றில் இலங்கை அரசாங்கம் தான் அடைந்ததாகக் கூறிய சமாதானத்தை இழந்து வருவதாக எழுதியுள்ளதை நிச்சயம் ஜனாதிபதி மகிந்தவும் வாசித்திருக்க சந்தர்ப்பம் உண்டு.
இவ்வாறன செய்திகள் வெளியாகும் இந்த வேளையில் மகிந்தவின் அரசாங்கம் வெற்றியைக் கொண்டாடுகின்றதாம். அந்த விழாக்களில் கலந்து கொள்ள அரசாங்கத்தை ஆதரிக்கும் தமிழ் முஸ்லிம் எம்பிக்களும் அடங்கவுள்ளார்கள்.
இவ்வாறு அரசாங்கம் அடுத்து வரும் நாட்களில் கொண்டாடப் போவதாக அறிவித்திருக்கும் விடயமானது அனைவருக்கும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. ஆமாம்.. அரசாங்கம் கொண்டாடவிருப்பது எதையொட்டிய வெற்றி அது?. யுத்த வெற்றியையா அலலது கொலை வெறியையா மகிந்தவின் அரசாங்கம் கொண்டாடவுள்ளது என்பதே அந்த கேள்வி.
கனடா உதயன் கதிரோட்டம்- 14-05-2010









