கோவை ஆர்.எஸ். புரம் சுக்கரவார் பேட்டை சின்ன எல்லை சந்து பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் ஆட்டோ டிரைவர். இவரது மகன் ஈஸ்வரன்(19) கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் தற்போது தான் ஐ.டி.ஐ. படித்து முடித்துள்ளார்.
ஈஸ்வரன் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர். இன்று விஜய்யின் சுறா படம் வெளியாவதையொட்டி நேற்று இரவு தனது நண்பர்களோடு பூக்கடையில் உள்ள ஒரு தியேட்டரில் கட்அவுட்கள் கட்டியுள்ளார். பின்னர் நள்ளிரவு வீட்டுக்கு சென்றார்.
இன்று அதிகாலை 6 மணிக்கு திரையிடப்பட்ட ரசிகர்கள் காட்சிக்காக டிக்கெட் வாங்கியிருந்தார். இதையடுத்து இன்று அதிகாலை படம் பார்க்க அதே பகுதியை சேர்ந்த நண்பர் குணசீலன அழைத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் கிளம்பினார்.
சுக்ரவார் பேட்டை அருகே வரும் போது கரூரில் இருந்து கவுண்டம்பாளையத்திற்கு மணல் ஏற்றி வந்த லாரியை முந்தி செல்ல முயன்றார். அப்போது எதிரே வந்த சைக்கிளில் பைக் மோதியது. இதில் நிலை தடுமாறி பைக் லாரிக்கு அடியில் சிக்கியது. லாரியின் பின் பக்க டயர் ஈஸ்வரன் தலையில் ஏறி இறங்கியது. இதில் ஈஸ்வரன் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
பின்னால் இருந்த குண சீலன் கால் துண்டானது. அவர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
விபத்தில் ஈஸ்வரன் இறந்த செய்தி கேட்டதும் தியேட்டரில் நின்ற நண்பர்கள் அனைவரும் அரசு ஆஸ்பத்திரி வந்தனர். அவர்கள் ஈஸ்வரனின் உடலை பார்த்து கதறி அழுதனர்.









