தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டதாக கழுகு பட இயக்குனர் மீது சென்னையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பொலிஸில் புகார் அளித்துள்ளார்.
கிருஷ்ணா, பிந்து மாதவி இணைந்து நடித்த ‘கழுகு’ படத்தை இயக்கியவர் சத்யசிவா.
இந்தப் படத்தைத் தயாரித்த பட்டியல் சேகர் அலுவலகத்தில் தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றிய சிவரஞ்சனி என்ற பெண்ணுக்கும் சத்யசிவாவுக்கும் காதல் ஏற்பட்டது.
சிவரஞ்சினியை திருமணம் செய்து கொள்வதாக சத்யசிவா வாக்களித்துள்ளார். ஆனால் திடீரென்று சத்யசிவா மனம் மாறி விட்டார்.
இதனால் மனமுடைந்த சிவரஞ்சினி தன்னை காதலித்து ஏமாற்றி விட்டதாக சத்யசிவா மீது பொலிஸில் புகார் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து சிவரஞ்சனி கூறுகையில், பட்டியல் சேகர் அலுவலகத்தில் பணியாற்றியபோது ‘கழுகு’ பட இயக்குனர் சத்யசிவாவை சந்தித்தேன்.
என்னிடம் வலிய வந்து காதலிப்பதாக கூறினார். நான் ஏற்கவில்லை. நீ இல்லாவிட்டால் செத்து விடுவேன் என்று மிரட்டினார்.
ஒரு கட்டத்தில் அவர் நீ காதலை ஏற்றுக் கொள்ளாவிட்டால் மாடியில் இருந்து குதித்து விடுவேன் என்று கூறி மொட்டை மாடியில் நின்று கொண்டு மிரட்டினார்.
ஒருமுறை தூக்கில் தொங்கப் போவதாக கூறி துப்பாட்டாவை கழுத்தில் மாட்டினார். இப்படி சினிமாவில் வருவதுபோல செய்து காட்டி என் மனதை மாற்றினார்.
நானும் காதலிக்க தொடங்கினேன். என்னை திருமணம் செய்வதாக உறுதி அளித்தார்.
அவரது பெற்றோரிடம் அழைத்து போய் அறிமுகப்படுத்துவதாகவும் சொன்னார். ஆனால் அதன்படி செய்யவில்லை. இந்நிலையில் திடீரென என்னை புறக்கணிக்க தொடங்கினார். வேறு பெண்களுடன் சுற்றுவதாக அறிந்தேன். இதனால் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றேன்.
பின்னர் வைத்தியசாலையில் சிகிச்சைக்கு பெற்றுக்கொண்டு பிழைத்து கொண்டேன். எனக்கு துரோகம் செய்த சத்யசிவா தண்டிக்கப்பட வேண்டும். அதற்காகத்தான் பொலிஸில் புகார் கொடுத்தேன் என்றார்.









