பிரபல குணசித்திர நடிகையும், பாடகி டிகே.கலாவின் தாயாருமான சண்முகசுந்தரி சென்னையில் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது. 75.
சண்முகசுந்தரிக்கு சிலமாதங்களுக்கு முன் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவ மனையில் தங்கி அவர் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் உயிரிழந்தார். அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. நாளை காலை வளசரவாக்கம் மயானத்தில் அவரது இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.
சண்முகசுந்தரிக்கு டி.கே.கலா, நீலா, மாலா, மீனா, செல்வி என 5 மகள்கள் உள்ளனர். இவர் எம்ஜிஆர், சிவாஜி உள்ளிட்டோருடன் நடித்துள்ளார். 45 ஆண்டுகளுக்கும் மேலாக சுமார் 750 படங்களில் இவர் நடித்துள்ளார்.
மிடில் கிளாஸ் மாதவன் என்ற படத்தில் வடிவேலுவின் தாயாராக சண்முகசுந்தரி நடித்திருந்தார். அப்போது காலையில் தாய், தந்தையை வணங்கிவிட்டு வேலைக்குச் செல்லும் ஆட்டோடிரைவர் வடிவேலு, மாலையில் மது அருந்திவிட்டுவந்து தாயாரிடம் அது வேற வாய் இது நாற வாய் என்று சொல்லும் காட்சி பிரபலமானது.










