நியூயோர்க் நகரில் உள்ள யேல் பல்கலைக்கழகத்தில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்லச் சென்றிருந்த பிரபல பொலிவுட் நடிகர் ஷாரூக்கான், மன்ஹாட்டனிலிருந்து 53 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள ஒயிட் பிளேயன்ஸ் விமான நிலையத்தில் குடியேற்ற அதிகாரிகளால் சுமார் 2 மணி நேரம் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டார்.
பின்பு இந்தியத் தூதரகம் தலையிட்டு ஷாருக் கானை மீ்ட்டது. நாட்டின் பிரபலமான ஒருவரை அமெரிக்க அதிகாரிகள் சங்கடத்திற்கு உள்ளாக்கியது குறித்து இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கண்டனம் தெரிவித்தார்.
இதையடுத்து இந்திய தூதரக அதிகாரிகளிடம் அமெரிக்க சுங்க மற்றும் எல்லைப்பாதுகாப்பு துறை அதிகாரிகள் மன்னிப்பு கடிதம் ஒன்றை வழங்கினர்.
இதுகுறித்து கருத்துத் தெரிவித்த எஸ்.எம்.கிருஷ்ணா, “இந்தியர் ஒருவருக்கு இது போன்று தொடர்ந்து நடப்பதும் பின்பு தூதரக அதிகாரிகள் மன்னிப்பு கேட்பதும் நல்லதல்ல” என்றார்.
இந்நிலையில் அமெரிக்கா மீண்டும் மன்னிப்பு கோரியுள்ளது. அமெரிக்கா தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் பீட்டர் ரூமென், “அமெரிக்கர்கள் நிறைய பேர் இந்திய திரைப்பட ரசிகர்களாக உள்ளனர். சிறந்த நடிகரான ஷாருக்கானை மதிக்கின்றனர். இதுபோல் இனிமேலும் நடைபெறாமல் பார்த்துக் கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இது ஒரு நிறவெறி வன்முறையல்ல என்றும், ஏதேச்சையாக நடந்த சம்பவம் என்றும் அமெரிக்கா கூறியுள்ளது.
மேலும், ஷாருக்கானை விமான நிலையத்தில் காலதாமதம் செய்த செயல் நடந்திருக்கக் கூடாது என்றும், அவ்வாறு நடந்தது குறித்து வருந்துவதாகவும் மாகாண செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.









